search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருளாதார தடை"

    • கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
    • வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவில் வசித்து வந்த சீக்கிய பிரிவினைவாத காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.

    இவ்விவகாரத்தில் இரு நாடுகள் இடையே விரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே இவ்விவகாரத்தை மீண்டும் கனடா கிளப்பியுள்ளது.

    நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. இதையடுத்து இந்திய தூதரை திரும்ப பெற இந்தியா முடிவு செய்தது. மேலும் டெல்லியில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 6 பேரை வெளியேற உத்தரவிட்டது.


    அதேபோல் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் 6 பேரை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு உத்தர விட்டது. இதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க கனடா ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்தியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க கனடா பரிசீலிக்குமா என்று கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலியிடம் நிரு பர்கள் கேட்டனர்.

    அதற்கு அவர், எல்லாம் மேஜையில் உள்ளது என்று பதிலளித்தார். பொருளாதார தடை தொடர்பாகவும் ஆலோசனை உள்ளது என்ற ரீதியில் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதனால் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப் படக்கூடிய சூழல் உள்ளது.


    இந்தநிலையில் கனடாவின் விசாரணைக்கு இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறும்போது, நிஜ்ஜார் கொலையில் கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை நாங்கள் தெளிவு படுத்தியுள்ளோம். அதன் விசாரணையில் இந்திய அரசாங்கம் கனடாவுடன் ஒத்துழைக்க விரும்புகிறோம் என்றார்.

    இதற்கிடையே கனடாவின் சீக்கிய கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜக்மீத் சிங் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

    • செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.
    • அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

    பீஜிங்:

    விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்புவதில் உலக நாடுகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளன. இந்தநிலையில் விமானம், விண்வெளி உபகரணங்கள், கட்டமைப்பு பாகங்கள், மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்ய சீனா கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

    இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்பு மற்றும் அணு ஆயுத பரவல் தடை போன்றவற்றிற்காக இந்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. அதேபோல் தைவானுக்கு ஆயுதங்களை விற்ற சில அமெரிக்க நிறுவனங்களுக்கும் சீனா பொருளாதார தடை விதித்துள்ளது.

    • உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
    • நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தது.

    இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி சிறையில் மரணம் அடைந்ததற்கு ரஷிய அதிபர் புதின்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்தது. மேலும் நவால்னி மனைவியை அமெரிக்க அதிபர் ஜோபைடன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது நவால்னியின் மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷியாவின் பொருளாதாரம், தொழில் துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகள் விதிக்கப்படும் என்று ஜோபைடன் தெரிவித்தார்.

    இந்த நிலையில் உக்ரைன் போர்-நவால்னி மரணம் விவகாரத்தில் ரஷியா மீது மேலும் பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷியாவை சேர்ந்த நிறுவனங்கள் தனி நபர்கள் உள்பட 500 இலக்குகள் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.


    உக்ரைன் மீது போர் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிகளவில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது, நாவல்னியின் சிறை வாசத்துடன் தொடர்புடைய நபர்கள், ரஷியாவின் நிதித் துறை, பாதுகாப்பு, தொழில் துறை, உள்ளிட்டவை மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது. ரஷியாவின் போருக்கு ஆதரவாக உள்ள 100 நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கிறோம் என்றார்.

    இதேபோல் சீனா உள்ளிட்ட சில நாடுகள் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கிடையே ரஷிய எதிர்க்கட்சி தலைவர் நவால்னி உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க ரஷிய அரசு நிபந்தனைகளை விதித்துள்ளது.

    நவால்னி உடலை பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கக்கூடாது. உடல் அடக்கத்தினை ரகசியமாக நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

    • ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம், கிர்கிஸ்தான் நிறுவனங்கள் மீது தடை
    • ஏற்றுமதியாளர்கள் மீதும் பொருளாதார தடை விதித்துள்ளது

    உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்த நாளில் இருந்து அமெரிக்கா பல்வேறு தடையை ரஷியா மீது அமல்படுத்தி வருகிறது. மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

    மேலும், உக்ரைன் பதிலடி கொடுக்க பில்லியன் கணக்கில் ராணுவ உதவிகளும் செய்து வருகிறது. இருந்தாலும் ரஷியா போரை நிறுத்துவதுபோல் தெரியவில்லை. வருவாய், ராணுவ உதவிகள் எங்கிருந்து வருகிறதோ, அந்த இடத்தையெல்லாம் முடக்கி, ரஷியாவிற்கு மூச்சுச் திணறலை கொடுக்க அமெரிக்கா முயற்சி செய்துள்ளது.

    அந்த வகையில் ரஷியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், கிர்கிஸ்தான் வரை பல்வேறு நாடுகளில் உள்ள 120 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதார தடைவிதித்துள்ளது.

    ரஷிய சுரங்கம், தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது பொருளாதார தடைவிதித்துள்ளது. கிர்கிஸ்தானில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ரஷியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நபர்கள் மீதும் இந்த பொருளாதார தடை பாய்ந்துள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாக கொண்ட பொறியியல் கம்பெனி ரஷியாவுக்கு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்தது. இந்த நிறுவனத்திற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே மாதம் ஜப்பானில் அமெரிக்கா மற்றும் ஏழு நடுகள் இடையிலான மாநாடு நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆஸ்திரேலியா பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதார தடைவிதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உக்ரைன் மீது முழு அளவில் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவுக்கு பொருளாதார அளவில் நெருக்கடி கொடுப்பதற்கும், சட்டவிரோத போரை ஆதரிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் பொறுப்புகளை மேம்படுத்துவதற்கும் இந்த எதிர்பாராத நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம்.

    உக்ரைனுக்கு எவ்வளவு காலம் தேவையோ, அவ்வளவு காலம் துணை நிற்போம்'' என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்துள்ளது.
    • வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    வாஷிங்டன் :

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து அடாவடி போக்கை கையாண்டு வருகிறது. அந்த வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்துள்ளது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் சில ஏவுகணைகளும் அடங்கும்.

    அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் வடகொரியா இத்தகைய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவின் தொடர் அடாவடி போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை வித்துள்ளது.

    அதே போல் தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய 3 மூத்த ராணுவ அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் பல தனிநபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    • 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
    • இந்த தடைகளால் தைவான் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்படும்.

    பீஜிங் :

    2-ம் உலகப்போருக்கு பிறகு சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான், தன்னை ஒரு சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது.

    இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, நான்சி பெலோசி தைவான் சென்றால் அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என பகிரங்கமாக எச்சரித்தது.

    ஆனால் சீனாவில் எதிர்ப்பயைும், மிரட்டலையும் புறந்தள்ளிவிட்டு நான்சி பெலோசி நேற்று முன்தினம் தைவான் சென்றார். கடும் பதற்றத்துக்கு மத்தியில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகர் தைபேயில் தரையிறங்கியது. அங்கு அவருக்கு தைவான் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

    அதை தொடர்ந்து அவர் தைவான் அதிபர் சாய் இங் வென் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு. தைவானுடன் நாங்கள் நிற்கிறோம். தைவானுக்கு பாதகமாக எதுவும் நடக்க நாங்கள் விடமாட்டோம். தைவான் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம். இதிலிருந்து தைவான் பின்வாங்கக் கூடாது. தைவானிலும் உலகெங்கிலும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடு இரும்புக்கரம் நிறைந்ததாகவே உள்ளது" என கூறினார்.

    இந்த நிலையில் நான்சி பெலோசியின் வருகையால் கடும் கோபத்தில் உள்ள சீனா, இந்த விவகாரத்தில் தைவானை தண்டிக்கும் விதமாக தைவான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

    அதன்படி தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை உணவு தயாரிப்பு நிறுவனங்கள் என்று கூறப்படுகின்றன.

    மேலும் தைவானின் தேயிலை இலைகள், உலர் பழங்கள், தேன், கொக்கோ பீன்ஸ், காய்கறிகள் மற்றும் மீன்வகைகள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. அதே போல் சீனாவில் இருந்து தைவானுக்கு இயற்கை மணல் ஏற்றுமதியை நிறுத்துவதாகவும் சீனா அறிவித்துள்ளது.

    தைவான் மீது சீனா கடுமையான அணுகுமுறையை கொண்டிருந்தாலும் சீனா தைவானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்து வருகிறது. எனவே சீனாவின் இந்த தடைகளால் தைவான் பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    இதனிடையே நான்சி பெலோசியின் வருகைக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக சீனாவுக்கான அமெரிக்கா தூதரை சீனா நேரில் அழைத்து சம்மன் வழங்கியது. மேலும் அமெரிக்கா தனது தவறுகளுக்கு விலையை கொடுக்கும் எனவும் சீனா எச்சரித்தது.

    • பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை
    • வேண்டுமென்றே பொருளாதாரத் தடைகளை விதிப்பவர்கள் இறுதியில் மற்றவர்களுக்கும், தங்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள்.

    பீஜிங்:

    இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ள பிரிக்ஸ் அமைப்பின் வர்த்தக மன்ற கூட்டத்தை காணொலி முறையில் சீனா நடத்துகிறது. இதில் தொடக்க உரையாற்றிய சீன அதிபர் ஜின்பிங், உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பொருளாதார தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை அரசியலாக்குபவர்கள் மற்றும் வேண்டுமென்றே பொருளாதாரத் தடைகளை விதிப்பவர்கள் இறுதியில் மற்றவர்களுக்கும், தங்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள். அத்துடன் உலக மக்களுக்கு பேரழிவுகளை ஏற்படுத்துவார்கள்' என்று சாடினார்.

    சர்வதேச மேலாதிக்கம், குழு அரசியல் மற்றும் கூட்டு மோதல்கள் அனைத்தும் அமைதியையோ, நிலைத்தன்மையையோ தருவதில்லை எனக்கூறிய ஜின்பிங், மாறாக போரையும், மோதலையுமே ஏற்படுத்துவதை வரலாறு காட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், பிரேசில் அதிபர் போல்சொனாரோ உள்ளிட்டோரும் உரையாற்றுவார்கள் என கூறப்பட்டு உள்ளது.

    அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை புறக்கணிப்பதாக ஈரான் அறிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. #DonaldTrump #Iran
    வாஷிங்டன்:

    அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து, பிறநாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகள் கடந்த 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின.

    அணுசக்தி ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்கவேண்டும். அதற்கு பிரதிபலனாக அந்நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப்பெற வேண்டும்.



    ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாக தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஆண்டு மே மாதம் 8-ந் தேதி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ஈரான் மீது டிரம்ப் நிர்வாகம் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது.

    இதனால் இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்காவின் தடைகளால் ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

    இந்த நிலையில், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகி, ஓராண்டு நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் ஈரான் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

    அணுசக்தி ஒப்பந்தத்தின் சில நிபந்தனைகளை தற்காலிகமாக புறக்கணிப்பதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி அறிவித்தார். அதாவது, ஒப்பந்தத்தின்படி தம்மிடம் உள்ள மிகுதியான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை விற்கவேண்டும் என்ற நிபந்தனையை புறக்கணிப்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான யுரேனியத்தை செறிவூட்டும் பணியில் இனி ஈரான் ஈடுபடும்.

    அத்துடன் அமெரிக்காவை தவிர்த்து, அணுசக்தி ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் மற்ற 5 நாடுகளும், இந்த ஒப்பந்தத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை 60 நாட்களுக்குள் நிறைவேற்றாவிட்டால் ஒப்பந்தத்தின் மேலும் சில நிபந்தனைகளை ஈரான் மீறும் என்றும் ஹசன் ருஹானி எச்சரித்தார்.

    இந்த நிலையில், ஈரானின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக அந்நாட்டின் உலோக ஏற்றுமதி மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது. எண்ணெய்க்கு அடுத்தபடியாக ஈரானின் 2-வது முக்கிய ஏற்றுமதிப் பொருள் உலோகங்கள் ஆகும். எனவே ஈரானுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த தடையை விதித்து இருக்கிறது.

    இதற்கான நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார். அப்போது பேசிய டிரம்ப், “தொழில்துறை உலோகங்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஈரானுக்கு கிடைக்கும் வருவாயை குறிவைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடையின் மூலம், தங்கள் நாட்டின் துறைமுகங்களில் ஈரான் நாட்டு உலோகங்களை அனுமதிப்பதை நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம் என்று பிற நாடுகளுக்கு அறிவிக்கிறோம்” என்றார்.

    மேலும், “தங்கள் நடத்தையை அடிப்படையில் ஈரான் மாற்றிக்கொள்ளாவிட்டால், அந்நாடு மேலும் புதிய நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம்” என்றும் டிரம்ப் எச்சரித்தார். அதே சமயம் ஈரான் தலைவர்களை சந்தித்துப்பேசி ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.  #DonaldTrump #Iran
    ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. #USSanctions
    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் பொருளாதார தடை என்ற பூச்சாண்டியை புறந்தள்ளி ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை தொடர முடிவு செய்துள்ள இந்திய அரசு, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளையும் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது.

    ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் விவகாரத்தில் அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா அதற்கான ஒப்பந்தத்தை செய்ததும் பொருளாதார தடைகள் பாயலாம் என்று பார்க்கப்பட்டது, ஆனால் தனக்கும் இழப்பு என அமெரிக்கா அமைதி காத்தது.

    இப்போது இவ்விவகாரத்தில் அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது இந்தியாவின் முடிவு இந்திய - அமெரிக்க உறவுக்கு உதவாது என்று எச்சரித்துள்ளது.

    “அமெரிக்காவின் எதிர்ப்பை மீறியும் ஈரானிடம் இருந்து 90 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் மற்றும் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவின் நகர்வு எந்தவகையிலும் இந்தியா மற்றும் அமெரிக்கா உறவுக்கு உதவப்போவது கிடையாது.

    இந்தியா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். இதற்கான முடிவை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பார்த்துக் கொள்வார்” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

    இந்தியா மீது பொருளாதராத் தடை விதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர், “ அதிபர் டிரம்ப்தான் அதுபற்றி கூற வேண்டும். அதிபருடைய பதிலை நான் கூற முடியாது. நான் வெள்ளை மாளிகை சார்பாக தான் பேச முடியும்” என்று கூறியுள்ளார். #USSanctions
    ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை மனிதாபிமான அடிப்படையில் அமெரிக்கா நீக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #IranSanctions #US
    தி ஹேக்:

    ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் உடன் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கையும் விடுத்தது.

    அமெரிக்கா விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை ரத்து செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் ஈரான் வேண்டுகோள் விடுத்திருந்தது. இது தொடர்பான விசாரணை நெதர்லாந்து நாட்டில் உள்ள தி ஹேக் நகரில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தில் நடத்தது. இதில் அமெரிக்கா மற்றும் ஈரான் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    ஈரான் மீதான அமெரிக்காவின் தொடர் பொருளாதாரத் தடைகள் குறித்த சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பில், ''மருந்துப் பொருட்கள், உணவு, விவசாயப் பொருட்கள் மற்றும் அடிப்படைப் பொருட்களின் ஏற்றுமதி மீதான பொருளாதாரத் தடைகள் அந்நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளைப் பாதிக்கும். எனவே இதனைக் கவனத்தில் கொண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும்'' என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.

    எனினும், சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பின்பற்றுகிறாரா? அல்லது இந்த வழக்கில் அமெரிக்கா மேல்முறையீடு செய்கிறதா? என்பது தெரியவில்லை. 
    ஈரான் மீது விதித்துள்ள பொருளாதார தடையை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் என பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா உள்ளிட்ட 5 நாடுகள் முடிவு செய்துள்ளன. #Iran #US
    நியூயார்க்:

    ஈரான் உடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த அமெரிக்கா, அந்நாட்டின் மீது தொடர்ந்து பொருளாதார தடைகளை விதித்தது. மேலும், ஈரான் உடன் எந்த நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களை நவம்பர் மாதத்துக்கு பின் மேற்கொள்ள கூடாது என எச்சரிக்கையும் விடுத்தது.

    இந்நிலையில், ஐநா சபை பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியாக பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, ஈரான்  ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது. அதில், அமெரிக்காவின் பொருளாதார தடைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

    இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்  பெடரிகா மொஜர்னி கூறும்போது,  “ஈரானுடன் ஏற்றுமதி செய்வது தொடர்பாக செலுத்தப்படும் பணம். ஈரானுடன் சட்டப்பூர்வமான வர்த்தக்கத்தை தொடருவதற்கு உதவும் பொருளாதார இயக்கநர்களுக்கு செய்யப்படும் உதவிகள் குறித்து உத்தரவாதம் அளிக்க சிறப்பு வழி முறைகளை உருவாக்க வேண்டும்" என்றார்.
    சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்று அமெரிக்கா மிரட்டி இருப்பது, உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #InternationalCriminalCourt #ICC
    வாஷிங்டன்:

    ரோமில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் கீழ், நெதர்லாந்து நாட்டில் திஹேக் நகரில் 2002-ம் ஆண்டு சர்வதேச குற்றவியல் கோர்ட்டு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த கோர்ட்டில் 123 நாடுகள் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளன. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சேராமலும் இருக்கின்றன.

    இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து சர்வதேச கோர்ட்டு விசாரணை நடத்தி நீதி வழங்குகிறது.

    இந்த சர்வதேச கோர்ட்டை அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது. இப்போது அதன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் மிகக்கடுமையாக விமர்சித்து இருப்பதுடன், பொருளாதார தடை என்ற ஆயுதத்தைக் காட்டி மிரட்டலும் விடுத்து இருக்கிறார்.

    சர்வதேச கோர்ட்டின் வக்கீல் பாதோ பென்சவுடா, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் செய்த போர்க்குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து போர்க்குற்றங்கள் குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உள்ளார். இதை சர்வதேச கோர்ட்டு பரிசீலித்து வருகிறது.

    ஆப்கானிஸ்தானில் ரகசிய காவல் மையங்களில், கைது செய்து அடைத்தவர்களை அமெரிக்க ராணுவம் சித்ரவதை செய்ததற்கு அர்த்தம் உள்ள ஆதாரங்கள் இருப்பதாக சர்வதேச கோர்ட்டு ஒரு அறிக்கையில் கூறியது.

    மேலும், காசா மற்றும் ஆக்கிரமிப்பு மேற்கு கரை பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து இஸ்ரேல் மீது விசாரிக்க பாலஸ்தீனம் சர்வதேச கோர்ட்டில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த இரண்டு பிரச்சினைகளும், அமெரிக்காவுக்கு சர்வதேச கோர்ட்டு மீது எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் கூறியதாவது:-

    ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச கோர்ட்டை ஆப்கானிஸ்தானும் கேட்கவில்லை.

    சர்வதேச கோர்ட்டில் உறுப்பினர்களாக எந்தவொரு நாடும் கேட்கவில்லை. சர்வதேச கோர்ட்டு அமெரிக்க இறையாண்மைக்கு எதிராகவும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

    நாங்கள் சர்வதேச கோர்ட்டுக்கு ஒத்துழைப்பு தர மாட்டோம். நாங்கள் சர்வதேச கோர்ட்டுக்கு உதவ மாட்டோம். நாங்கள் சர்வதேச கோர்ட்டில் சேரவும் மாட்டோம். சர்வதேச கோர்ட்டு, அதன் முடிவை தேடிக்கொள்ள விட்டு விடுவோம். எல்லாவற்றுக்கும் மேலாக, எங்களைப் பொறுத்தமட்டில் சர்வதேச கோர்ட்டு ஏற்கனவே செத்துப்போய் விட்டது.

    சர்வதேச கோர்ட்டு சட்ட விரோதமானது. எங்கள் குடிமக்களைக் காப்பதற்கு நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம். அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டால் சர்வதேச கோர்ட்டுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்போம்.

    சர்வதேச கோர்ட்டை சேர்ந்தவர்கள் மீது அமெரிக்க குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். அமெரிக்கர்களுக்கு எதிரான விசாரணையில் சர்வதேச கோர்ட்டுக்கு உதவுகிற எந்தவொரு நிறுவனம் அல்லது நாட்டின் மீதும் நடவடிக்கை எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ஜான் போல்டனின் கருத்துக்களை ஆதரித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, “அமெரிக்க குடிமக்களையும், எங்கள் நட்பு நாடுகளையும் சர்வதேச கோர்ட்டின் நேர்மையற்ற வழக்குகளில் இருந்து காப்பதற்கு ஜனாதிபதி டிரம்ப் எதை வேண்டுமானாலும் செய்வார்” என்று குறிப்பிட்டார்.

    சர்வதேச கோர்ட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கிற பட்சத்தில், அதன் நீதிபதிகளும், வக்கீல்களும் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. அவர்களது அமெரிக்க நிதிகள் முடக்கப்படும்.

    அமெரிக்காவின் மிரட்டலுக்கு சர்வதேச கோர்ட்டு பதிலடி கொடுத்து உள்ளது.

    இது தொடர்பாக சர்வதேச கோர்ட்டு விடுத்து உள்ள அறிக்கையில், “சர்வதேச கோர்ட்டு என்பது நீதி வழங்கும் ஒரு அமைப்பு. ரோமில் ஏற்படுத்தப்பட்ட சட்ட எல்லைக்குள் அது கண்டிப்புடன் செயல்படுகிறது. அது சுதந்திரமான, பாரபட்சமற்ற நீதி வழங்க உறுதி கொண்டு உள்ளது” என கூறப்பட்டு உள்ளது. இருப்பினும் சர்வதேச கோர்ட்டுக்கு பொருளாதார தடை விதிப்போம் என்னும் அமெரிக்காவின் மிரட்டல், உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×